ஓடிடி திரை அலசல் | Swathi Mutthina Male Haniye - மரணப் பாதையில் அன்பைத் தேடும் பயணம்!

ஓடிடி திரை அலசல் | Swathi Mutthina Male Haniye - மரணப் பாதையில் அன்பைத் தேடும் பயணம்!
By: TeamParivu Posted On: January 06, 2024 View: 46

நாயகனிடம் நாயகி, ‘நீ ஏன் மல்லிப்பூ செடியை பரிசளித்தாய்?’ என கேட்கும்போது, “நீ அதை கொண்டாடவில்லை என்றாலும் அது பூக்கும், அது கடவுளிடம் சென்றடையவில்லை என்றாலும் பூக்கும், யாரும் அது குறித்து கவிதை எழுதாவிட்டாலும் அது பூக்கும், நீ அதை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றாலும் அது பூக்கும், அது மற்றவர்களுக்காக பூக்கவில்லை. அது தனக்காக மட்டுமே பூக்கிறது. உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம்” என்பார் நாயகன். இயக்குநர் ராஜ்.பி ஷெட்டியின் இந்த வசனம் வாழ்க்கை குறித்த அணுகுமுறை வேறொரு கோணத்தில் பார்க்கச் சொல்கிறது. படமும் கூட உங்களுக்கு அப்படியான ஒரு வித்தியாச அனுபவத்தை கொடுக்க முயல்கிறது.
அடுத்த நொடியின் இருப்பை உறுதி செய்ய முடியாத நோயாளிகளின் கூடாரம் அந்த மருத்துவமனை. அங்கிருப்பவர்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம். அவர்களில் பெரும்பாலானோருக்கு புற்றுநோய். இந்த மருத்துவமனையில் மனநல ஆலோசகராக பணியாற்றி வருகிறார் பிரேரணா (சிறி ரவிக்குமார்). வலிமிகு தருணங்களைச் சுமக்கும் நோயாளிகளின் கதைகள், மரணங்களை பார்த்து பழகி, களங்கும் அவர், அது தன்னை பாதித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.
எப்போதும் வேலையிலேயே மூழ்கியிருக்கும் கணவர் சாகர் (சூர்ய வசிஷ்ட). மனைவிக்கு நேரம் ஒதுக்காத கணவர் மற்றவருடன் உறிவில் இருப்பதை அறிந்தும் அமைதியாக கடக்கிறார் பிரேரணா. அது குறித்து சண்டையிடவோ, கூச்சலிடவோ அவர் விரும்பவில்லை. விழிப்பது, குப்பைகளை சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது, தோசை சுடுவது, பிஸியாக இருக்கும் கணவருக்கு காஃபி கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்வது, அங்கிருக்கும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டு ஆலோசனை வழங்குவது இப்படியான ஒரு சலிப்பான வாழ்க்கையை வாழ்ந்து வரும் பிரேரணா உலகில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனிகேத் (ராஜ்.பி.ஷெட்டி) நுழைய, அவரின் வாழ்க்கையை எப்படி மாறுகிறது என்பதே திரைக்கதை. கன்னட படமான இது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
மரணத்தை எதிர்பார்த்து வாழ்வது ஒரு சாபம். இதோ... இன்றைக்கு, நாளைக்கு அல்லது நாளை மறுநாள் என எப்போது வேண்டுமானாலும் கவ்விக்கொள்ள காத்திருக்கும் மரணத்தை அருகில் வைத்து வாழும் மனிதர்களின் கதையை காதல், தத்துவம் கலந்து பேரமைதியுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜ்.பி.ஷெட்டி. பெண் ஒருவரின் பார்வையிலிருந்து விரியும் இப்படத்தில் அவரின் அழுத்தம் மிகு உலகம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரேரணா தனக்கு மற்றொருவர் மீது காதல் உள்ளது என தாயிடம் கூறும்போது, “திருமணமான மகள் தனது அம்மாவிடம் இப்படி கேட்பது தவறு. ஆனால், நான் ஒரு தாயாக இதனை பார்க்கும்போது தப்பாக தெரியவில்லை. துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது என கழியும் நம் வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்... காதலைத் தவிர! நாமும் கேட்பதில்லை. அவர்களும் தருவதில்லை. நாம் வாழ்வு முழுவதும் காதலுக்காக ஏங்கி மடிகிறோம்” என தாய் பதிலளிப்பார். எத்தனை அழுத்தமான வசனம். மொத்த பெண்களின் வலியை ஒற்றை வசனத்தில் அழகாக கடத்தியிருப்பார்.
பிரேரணாவிடம் ஆயுள் இருக்கும். சுற்றி எல்லோரும் இருப்பார்கள். மன மகிழ்ச்சி இருக்காது. விரைவில் மரணத்தை தழுவப்போகும் அனிகேத்துக்கு யாரும் இருக்கமாட்டார்கள். அதேபோல வாழ்நாளும் இருக்காது. ஆனால் மகிழ்ச்சியும் வாழ்க்கை மீதான காதலும் மரிக்காமல் இருக்கும். வெவ்வேறு சூழலில் இயங்கும் இந்த இரண்டு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரம் மற்றொன்றுக்கு தன்னிடமிருக்கும் அன்பையும், மகிழ்ச்சியையும் பரிசளித்துவிட்டு இறந்துவிடுகிறது. காதலையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்தளித்துவிட்டு வாழ்க்கை குறித்த கோணத்தை மாற்றிவிட்டு செல்பவர்களின் பிரியாவிடையை பேசும் படத்தில் இரண்டு முதன்மை கதாபாத்திரங்களும் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளன.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..